டெல்லி : பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம், இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் தொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான வழிகாட்டியாக அமையும் என மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் கவாத்ரா தெரிவித்து உள்ளார்.
ஜூன் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். யோகா விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வழங்கும் இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான தொழில், பாதுகாப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் வினய் மோகன் கவாத்ரா, "பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் புது மைல்கல்லாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், இரு நாட்டு தலைவர்களின் கலந்துரையாடலின் போது பாதுகாப்பு துறையின் இணை உற்பத்தி மற்றும் இணை வளர்ச்சி பற்றிய அனைத்து அம்சங்களும் இடம் பெறும் என்று கூறினார்.
இந்த சந்திப்பின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதாக இருக்கும் என்றார். இரண்டாவதாக வலிமையான வர்த்தகம் மற்றும் இருதரப்பு முதலீடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மூன்றாவதாக டெலிகாம், விண்வெளி ஆராய்ச்சி, உற்பத்தி, தொழில்நுட்பம், முதலீடுகள் குறித்து இரு தலைவர்களும் கலந்தாலோசிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, வரும் ஜூன் 21ஆம் தேதி நியூயார்க் நகரில் நடபெறும் மாபெரும் யோகா விழாவில் கலந்து கொள்கிறார். ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்க கடந்த 2014ஆம் ஆண்டு ஐநா பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
யோகா தின விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி அங்கிருந்து ஜூன் 22ஆம் தேதி, வாஷிங்டன் செல்கிறார். அங்கு அமெரிக்கா பாதுகாப்பு படையினர் வழங்கும் ராணுவ மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திக்கும் பிரதமர் மோடி, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை சந்திக்கும் பிரதமர் மோடி, அவர்கள் வழங்கும் விருந்தில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த உரையின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டாவது முறையாக உரையாற்றும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற சிறப்பை பிரதமர் மோடி பெறுகிறார்.
தொடர்ந்து அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பல்வேறு அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடும் பிரதமர் மோடி, இறுதியாக இந்திய வம்சாவெளியினரை சந்தித்து உரையாட உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க : காரில் கிடந்த குழந்தைகள் சடலம்! காணாமல் போனவர்கள் சடலமாக கண்டெடுப்பு!