டெல்லி: மத்திய பாதுகாப்பு படையில் சேர்வதற்காக டிஎஸ்எஸ்சி (DSSC) மற்றும் டிஎஸ்டிஎஸ்சி (DSTSC) நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2022ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் முறையாக 22 பெண் ராணுவ அதிகாரிகள், இந்த தேர்வுகளை எழுதினர்.
இந்த நிலையில், முதல்முறையாக 6 பெண் அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நான்கு அதிகாரிகள், தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் சேர்ந்து, ஓராண்டுக்கு பயிற்சி பெறவுள்ளனர். இவர்களுக்கு ராணுவ செயல்பாடு, உளவுத்துறை, தளவாடங்கள், நிர்வாக அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
மீதமுள்ள இரண்டு பெண் அதிகாரிகளில் ஒருவர், பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்ப பணியாளர் பயிற்சியில் சேரவுள்ளார்.மற்றொருவர், நிர்வாகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை அல்லது உளவுத்துறை பணியாளர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சியில் சேரவுள்ள நான்கு பெண் அதிகாரிகளில் ஒருவர், அதே தேர்வில் தேர்ச்சி பெற்ற தனது கணவருடன் சேர்ந்து பயிற்சி பெற இருக்கிறார். வெலிங்டன் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில், பயிற்சி பெறவுள்ள முதல் தம்பதி இவர்கள்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.