மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 13 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அரசு முடிவுசெய்தது. அதற்கு மும்பை உயர் நீதிமன்றமும் அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின்போது, இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மகாராஷ்டிரா அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, எவ்வளவு விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் தீர்ப்பை காலத்திற்கு ஏற்றாற்போல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வாதாடினார். காலத்திற்கு ஏற்ப எவ்வளவு விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற முடிவை அந்தந்த மாநில அரசு எடுக்கவிட்டுவிட வேண்டும் என்றும் முகுல் ரோத்தகி தெரிவித்தார். 1931ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே மண்டல் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு முடிவுசெய்த போதே 50 விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரையறை மீறப்பட்டுவிட்டது என்றும் ரோத்தகி தெரிவித்தார்.
நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு, "நீங்கள் கூறுவதுபோல், 50 விழுக்காடு என்ற வரையறை இல்லை எனில். சமத்துவம் என்ன ஆகும்? இறுதியாக, நாங்கள் அதனைக் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில், உங்கள் கருத்து என்ன? முடிவாக சமத்துவமின்மை நிலவாதா? இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும்?" எனக் கேள்வி எழுப்பியது.
இதற்குப் பதிலளித்த ரோத்தகி, "1931ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட மண்டல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய காரணங்கள் உண்டு. மக்கள் தொகை பல மடங்காக உயர்ந்துள்ளது. 135 கோடி வரை எட்டியுள்ளது" என்றார்.
இது குறித்து அமர்வு, "சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. பல மக்கள் நல திட்டங்களை அரசு முன்னெடுத்துள்ளது. இதுநாள் வரை வளர்ச்சி அடையவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? பிற்படுத்தப்பட்ட சாதிகள் முன்னேறவில்லையா?" எனக் குறிப்பிட்டது.
இதற்கு ரோஹத்கி, "நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நாடாளுமன்றம் அறிந்துகொள்ள வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும்போது, அது 50 விழுக்காட்டை மீறிவிட்டது என்பது நாடாளுமன்றத்திற்குத் தெரியும். அதேபோல், 50 விழுக்காட்டிற்கு மேல் இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிடக்கூடாது" என்றார்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை மார்ச் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.