கோழிக்கோடு(கேரளா): நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக்கோப்பை கால்பந்து வரும்போது, கேரள மக்கள், குறிப்பாக வடக்கு கேரளாவில் திருவிழா போல் கொண்டாடப்படும். பல ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க அணிகள் மலபார் மக்களின் கால்பந்து வெறியை அடையாளம் கண்டு, இங்குள்ள ரசிகர்கள் வெளிப்படுத்தும் வெறித்தனத்தை தங்கள் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பகிர்ந்துகொள்வது வழக்கம்.
2022 FIFA கால்பந்து உலகக்கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, கோழிக்கோடு, புள்ளவூரில் உள்ள செருபுழாவில் அர்ஜென்டினா ரசிகர்களால், அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸிக்கு பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது. இது இப்போது அர்ஜென்டினாவில் கூட டிரெண்டிங் ஆகி உள்ளது.
அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி இந்த 30 அடி உயர மெஸ்ஸி கட் அவுட்டின் படத்தை தங்கள் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஒரு அழகிய இடத்தில் ஆற்றின் நடுவில் ஒரு சிறிய தீவில் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் பார்க்கமுடியும். இங்குள்ள அர்ஜென்டினா ரசிகர்கள், இந்த முறை தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்று நம்பி காத்திருக்கின்றனர்.
மலபாரில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ரசிகர்களுக்கு இடையே நிலவும் போட்டி மிகவும் பிரபலமானது. மேலும் கால்பந்து ரசிகர்கள், சங்கங்கள் மலபார் தெருக்களில் தங்கள் அணிகளை விளம்பரப்படுத்த பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவி தாக்கியதாக பிரதமர் அலுவலகத்தில் கணவர் புகார்...!