காத்மண்டு : நேபாளம் சொலுகும்பு மாவட்டத்தில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 6 பேருடன் சென்ற NA-MV என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சொலுகும்பு மாவட்டம் சுர்கே விமான நிலையத்தில் இருந்து 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ப்ட 6 பேருடன் ஹெலிக்பாடர் காத்மண்டு நோக்கி புறப்பட்டது. காலை 10.13 மணி அளவில் 12 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென ஹெலிகாப்டர் கட்டுபாட்டு அறையுடனான இணைப்பில் துண்டிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஹெலிகாப்டர் காணாமல் போனதாக தகவல் பரவியது. காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதனிடையே 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்குமோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.
இந்நிலையில் பகன்ஜே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கும் போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து பேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 மெக்சிகன் நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகாப்டர், காத்மாண்டுவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்தது என்று தகவல் தெரிவித்து உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஐந்து மெக்சிகோ நாட்டவர்களும் விமானி செட் பி குருங்கும் ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. 1997 ஆம் ஆண்டு நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் மனாங் ஏர் ஹெலிகாப்டர் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது.
நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒழுங்குமுறையின் கீழ் நேபாள எல்லைக்குள் வணிக விமானப் போக்குவரத்தில் ஹெலிகாப்டர்களை இந்த நிறுவனம் இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீடிப்பு வழக்கு... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்குபிடி!