புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
துணை ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர் பயனாளிகளுக்கு ரூ. 11.90 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கட்டை அட்டைகளை வழங்கினார்கள்.
அப்போது பேசிய புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை, ''மீனாட்சி எப்படி ஆட்சி புரிவாள் என்று இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதோ அதேபோன்று மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மீன் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்கலாம். எனக்கு மீன் குழம்பு ரொம்பப் பிடிக்கும்'' என்று பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, மேற்கு வங்கத்தில் மீனை சைவம் என்று சொல்வதுபோல், இங்கேயும் சைவம் என்று சொன்னால் மீனவர்கள் மேலும் பயன்பெறுவார்கள்'' என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: Government Jobs: அரசுப் பணியிடங்களில் இனி முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை - அரசாணை வெளியீடு
புதுவை மாநில வளர்ச்சிக்காக முதலமைச்சர் ரங்கசாமி என்ன செய்கிறாரோ அவருக்கு துணையாக நின்று அனைத்து பணிகளையும் செய்வதால் தான் என்னை துணைநிலை ஆளுநர் என்று குறிப்பிடுகிறார்கள் என்று சுட்டிக் காட்டிய தமிழிசை புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால் அந்தத் திட்டம் மேம்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் என்று குறிப்பிட்டார்.
’காலாப்பட்டு தொகுதியில் தூண்டில் முள் வளைவு அமைப்பது குறித்து அண்டை மாநிலமான தமிழக அதிகாரிகளோடு பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், காலாப்பட்டு தொகுதியில் கடல்சீற்றம் அதிகமாக உள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் பேசுகிறார். கடல் மட்டும் சீற்றமல்ல அவரும் சீற்றமாகத் தான் இருக்கிறார்.
மக்கள் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றி புதுச்சேரி அரசு வேகமாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால் சிலர் இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பிரச்னைகளைத் தூண்டி வருகின்றனர்’ என துணைநிலை ஆளுநர் தமிழிசை குற்றம் சாட்டினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி, கல்யாணசுந்தரம் மற்றும் தலைமைச் செயலர் ராஜு வர்மா, உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கலை சேர்ந்த மீனவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திமுகவினரால் ரயில் பாதையில் சிக்கிய பள்ளி வாகனம்: துரிதமாக செயல்பட்டு மீட்ட எஸ்.ஐ!