பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள சைனிக் பண்ணை இல்லத்தில் இந்த திருமண விழா நடைபெற்றது.
தனது பள்ளித் தோழியான ரச்சேல்லை திருமணம் செய்கிறார் தேஜஸ்வி. இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் நிலையில், திருமணத்திற்குப்பின் ரச்சேல் ராஜேஸ்வரி யாதவ் என தனது பெயரை மாற்றியுள்ளார்.
இந்த திருமணத்தில் தேஜஸ்வி தந்தை லாலு யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி ஆகியோர் திருமண சடங்குகளை மேற்கொண்டனர். தேஜஸ்வியின் மூத்த சகோதாரர் தேஜ் பிரதாப், அவரது ஏழு சகோதரிகள் ஆகியோர் என நிகழ்வில் நெருங்கிய நபர்கள் மொத்தம் 50 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோரும் விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
லாலுவின் பிள்ளைகளில் இளையவரான தேஜஸ்வி, லாலுவின் அரசியல் வாரிசாக கருதப்படுகிறார். 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை பிகாரின் துணை முதலமைச்சராக இருந்தார் தேஜஸ்வி. இவர் அரசியல் களத்திற்கு வரும் முன்னர் கிரிக்கெட் களத்திலும் செயல்பட்டுள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டின் சோலார் மின் உற்பத்தி மும்மடங்கு உயர்வு