ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு முதல் இரவு விமானம் இயக்கப்பட்டுள்ளது. கோ ஏர் நிறுவனம் இயக்கிய இந்த விமானம், விமான நிலையத்திலிருந்து நேற்றிரவு 7.15 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக முதன்மைச் செயலாளர் ரஞ்சன் பிரகாஷ் தாக்கூர் கலந்துகொண்டு, விமானத்தின் பணியாளர்களையும், பிற தரைப்பணியாளர்களையும் வாழ்த்தினார்.
அப்போது பேசிய பிரகாஷ் தாகூர், "ஸ்ரீநகரிலிருந்து இரவு விமான நடவடிக்கைகளின் தொடக்கமானது ஜம்மு-காஷ்மீருக்கான விமான இணைப்பை மேம்படுத்தும் என்பதால் ஒரு புதிய சகாப்தத்தின் விடியலைக் குறிக்கிறது.
இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி யூனியன் பிரதேசத்தின் சுற்றுலாத் துறையை உயர்த்துவதால் பிராந்தியத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும். இதன் மூலம் சுற்றுப்பயணம் ஏற்பாட்டாளர்களின் நீண்டகால கோரிக்கை பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாத் துறை இங்குள்ள பொருளாதாரத்தின் மையமாக இருப்பதால் ஜம்மு-காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சிக்கு இது கணிசமாக உதவும். விமானங்களின் இரவு விமான நடவடிக்கைகள் தொடங்கப்படுவதால், கோடைக் கால அட்டவணையில் ஜம்மு-காஷ்மீருக்கு விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் தீ விபத்து!