கசார்கோட்: கத்தாரில் நடந்து வரும் பிஃபா உலக கோப்பை கால்பந்து 2022 தொடரில் சில நாட்களுக்கு முன் சவுதி அரேபியாவுடன் மோதிய அர்ஜென்டினா அணி தோற்றது. இதில் நட்சத்திர விளையாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி தோற்றார். இது கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் நிப்ராஸ் அர்ஜெண்டினா அணியின் தோல்வியை கண்டு கண்கலங்கினார்.
அவரது நண்பர்களின் கேலிகளைத் தாண்டி அர்ஜென்டினா அணி மீதும், லியோனல் மெஸ்ஸி மீதும் அவர் வைத்திருந்த அன்பு அவரின் கண்களில் கண்ணீராக வடிந்தது. வீடியோவில் "இன்னும் போட்டிகள் உள்ளன, நாங்கள் வெற்றி பெறுவோம். மெஸ்ஸி ஹாட்ரிக் அடிப்பார்" எனக் கூறும் போதே தானாக கண் கலங்குகிறார். இதனையடுத்து நிப்ராஸ் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோவைத் தொடர்ந்து பையன்னூரைச் சேர்ந்த ஸ்மார்ட் டிராவல் என்ற டிராவல் ஏஜென்சி இந்த தீவிர ரசிகரை இலவசமாக கத்தாருக்கு அழைத்து செல்லவும், அங்கு மெஸ்ஸியையும் மற்ற அர்ஜென்டினா வீரர்களையும் சந்திக்க அனுமதிக்க கத்தாரில் உள்ள ஏஜென்சியுடன் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இது தொடர்பாக நிப்ராஸ் ஈடிவிபாரத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "எனக்கு ஒரு நினைவு பரிசு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் முதலில் என்னை அவர்களது அலுவலகத்திற்கு அழைத்தார்கள். நான் அங்கு சென்றபோது, அவர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொன்னார்கள். நான் மகிழ்ச்சியடைந்தேன்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:FIFA World Cup: இன்றைய போட்டிகளின் முழு விவரம்