டெல்லி: சூடானில் கடந்த வாரம் ராணுவப் படையினருக்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 12 நாட்களாக இரு படைகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதனால் சூடான் முழுவதும் போர்க்களமாக மாறியுள்ளது. தலைநகர் கார்ட்டூம் உள்ளிட்டப் பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எல்லா பகுதிகளிலும் குண்டு மழை பொழிகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் கூட கிடைக்காத அவல நிலை உள்ளது. இதனால், சூடானில் சிக்கியுள்ள தங்கள் மக்களை மீட்கும் பணிகளில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நேரடியாக களமிறங்கி தங்கள் மக்களை மீட்டு வருகின்றன.
இதையும் படிங்க: Operation Kaveri: சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்!
இதனிடையே சூடானில் சிக்கித் தவிக்கும் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சவுதி அரேபியா வழியாக இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. ’ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தின் கீழ் சூடானிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருவதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வர கப்பல்களும், விமானங்களும் தயாராக உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று(ஏப்.24) தெரிவித்திருந்தார். மீட்புப் பணிக்காக, சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாநகர் விமான நிலையத்தில் இந்திய விமான படையைச் சேர்ந்த 2 விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தில் முதல்கட்டமாக 278 பேர் சூடானிலிருந்து மீட்கப்பட்டு, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். இவர்கள் ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. இவர்கள் ஓரிரு நாட்களில் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டு சூடானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. பின்னர் ராணுவத் தளபதி பர்ஹானும், துணை ராணுவப் படைத் தலைவர் டக்லோவும் ஆட்சியைக் கைப்பற்றினர். இவர்கள் இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்த நிலையில், இருவரது படைகளும் தற்போது சண்டையிட்டு வருகின்றன.