டெல்லி:இந்திய கடற்படையின் தனி விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா அடுத்த மாதம் முதல் செயல்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்கப்பல் கடந்த 2013 ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தின் கீழ் வாங்கப்பட்டது. இது மாற்றியமைக்கப்பட்ட கியேவ் வகை விமானம் தாங்கி போர்க்கப்பலாகும். மேலும் இதற்கு புகழ்பெற்ற பேரரசரான விக்ரமாதித்யாவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 21) ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பல் கர்நாடகாவில் உள்ள கார்வார் தளத்தில் இருந்தது.அப்போது திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் போர்க்கப்பலில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கடற்படைத் தலைமையகம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு தகவல் அளித்துள்ளது.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. "கடலில் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்ட போது, இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, 2019 ஏப்ரலில் தனி விமானம் தாங்கி கப்பலில் தீப்பிடித்ததில் இளம் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு மே மாதமும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 44,500 டன் எடை கொண்டது.இது சுமார் 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் கீழ் உள்ள தளம் முதல் மிக உயரமான இடம் வரை 20 மாடி கட்டிடம் உள்ளது.கப்பலில் மொத்தம் 22 தளங்கள் உள்ளன. மேலும் இது MiG 29K ஜெட் விமானங்கள், Kamov 31 மற்றும் Kamov 28 ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய 30 க்கும் மேற்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
இதையும் படிங்க:நாட்டின் 15ஆவது ஜனாதிபதி யார்? - தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது