ஹல்டியா: மேற்கு வங்க மாநிலம் ஹல்டியா மாவட்டத்தில் இந்தியன் ஆயில் காப்பரேஷனுக்குச் சொந்தமான ஆலை ஒன்று உள்ளது. ஆலையின் சுத்தகரிப்பு நிலையத்தில் நேற்று மதியம் 2.50 மணி அளவில் பராமரிப்புப் பணி நடந்துகொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா கொண்டுவரப்பட்டனர்
இந்த விபத்தில் சிக்கிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், 44 பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் மேல்சிகிச்சைக்காக கொல்கத்தாவுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
மேலும், இந்த விபத்து குறித்து உயர்மட்ட அலுவலர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விலைமதிப்பில்லாத உயிர்களை இழந்தோம்
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஹல்டியா ஐஓசியில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விலை மதிப்பில்லாத மூன்று உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்தத் துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் பசுமை வழிச்சாலை மூலம் உடனடியாக கொல்கத்தா கொண்டுவரப்பட்டனர். அவர்கள் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளையும் அவர்களுக்கும் வழங்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை கூட்டத்தொடரிலிருந்து திரிணாமுல் எம்.பி இடைநீக்கம்