விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டிக்குள் தனியாருக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் யூனிட் மூன்றில் நேற்று (டிசம்பர் 26) தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதன்பின் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை அலுவலர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து அனகாபல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் டி ராஜேஷ் பாபு, ஆர் ராம் கிருஷ்ணா, பி ராம்பாபு மற்றும் எம் வெங்கட ராவ் என்பது தெரியவந்துள்ளது. இவர்களது உடல்களை ஆய்வுக்காக கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
கெமிக்கல் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கசிவைத் தடுக்க தொழிலாளர்கள் முயன்றபோது தீப்பிடித்துள்ளது எனத் தெரிவித்தனர். ஜவஹர்லால் நேரு பார்மா சிட்டியில் உள்ள பல்வேறு மருந்து நிறுவனங்களின் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. பல நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதையும் படிங்க: கூரியர் கடையில் மிக்ஸி வெடிப்பு.. கர்நாடகாவில் மீண்டும் பதற்றம்..