மகாராஷ்டிர தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடமாகும்.
இந்நிலையில், நேற்று (பிப். 25) மாலை முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சொகுசு வாகனம் நிற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர், வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு, பயங்கரவாத தடுப்புக் குழுவினர் சென்றனர்.
அப்போது, அந்தக் காரில் ஜெலட்டின் குச்சிகள் மட்டுமே இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அவற்றை வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழுவினர் அப்புறப்படுத்த, காரை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்தக் காரின் நம்பர் ப்ளேட் அம்பானி வீட்டின் பாதுகாப்பு வாகனங்களுக்கான பிரத்யேக எண்ணைக் கொண்டிருந்தது.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். விசாரணையில், அது போலி நம்பர் ப்ளேட் என்பது தெரியவந்துள்ளது. காருக்குள் ஒரு மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கடிதம் பற்றிய விவரத்தை காவல் துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இது குறித்து ட்வீட் செய்துள்ள மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், "மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகிலுள்ள ஸ்கார்பியோ வேனிலிருந்து வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மும்பை குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இதுதான் முதல்முறை: தடம்பதிக்கும் மோடி!