லக்னோ: முனாவர் ரானா என்பவரின் கருத்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாக இருப்பதாக பி.எல். பாரதி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லக்னோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 153(அ) மதத்தின் அடிப்படையில், இருபிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, 295(அ) மத நம்பிக்கையை புண்படுத்துவது, 505(1)(ஆ) பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கவிஞர் முனாவர் ரானா, "ராமாயணத்தை எழுதிய பின்னர் வால்மீகி கடவுள் ஆனார். அதற்கு முன்னதாக அவர் கொள்ளைக்காரனாக இருந்தார். அதுபோல, தற்போது தாலிபான்கள் தீவிரவாதிகளாக உள்ளனர். அவர்கள் மீது மக்கள் வைத்துள்ள மதிப்புகள் மாறலாம்.
வால்மீகி குறித்து பேசும்போது, அவருடைய கடந்த காலம் குறித்து பேசவேண்டும். உங்களுடைய மதத்தில் யாரைவேண்டுமானாலும் கடவுள் ஆக்குவீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முகமது நபி குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டபோது அதற்கு ஆதரவாக இவர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்காக அவர் மீது உத்திரப்பிரதேச மாநிலம் ஹஜ்ரத்கஞ்ச் காவல்நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தில் திமுக பங்கெடுக்கும் - ஸ்டாலின்