ராமநகரா (கர்நாடகா): மேகதாதுவில் இருந்து பெங்களூரு வரை மேகதாது குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) பாதயாத்திரையை தொடங்கினர்.
ராமநகரா மாவட்டம் கனகபுரா அருகே காவிரி சங்கமத்தில் பாதயாத்திரையை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மல்லிகார்ஜுன் கார்கே தொடங்கிவைத்தார்.
மேகதாது குடிநீர் திட்டம்
மேகதாது குடிநீர் திட்டம் என்பது ஒரு பல்நோக்கு திட்டமாகும். இது பெங்களூரு மற்றும் அண்டை பகுதிகளுக்கு குடிநீரை உறுதி செய்யும். மேலும், இந்தத் திட்டத்தில் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் இதிலிருந்து உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மதிப்பீடு ரூ.9 ஆயிரம் கோடி ஆகும். இந்தப் பாதயாத்திரையில் மாநிலத்தின் முன்ளாள் முதலமைச்சர் சித்த ராமையா, காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், கனகபுரா தாலுகாவில் உள்ள சதனுரு காவல் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் மீது தொற்று நோய் பரப்பும் வகையில் கூட்டம் கூட்டியதாக, தொற்றுநோய் தடுப்புச் சட்டம் 2005இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கனகபுரா எம்எல்ஏ ஆன டிகே சிவக்குமாரின் சொந்த கிராமமான தொட்டலஹள்ளி கிராமத்தை ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை சென்றடைந்தது.
பாதியில் திரும்பிய சித்த ராமையா
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் தொட்டாலஹள்ளியில் இருந்து தொடங்கியது. ராமநகரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பாதயாத்திரையில் பங்கேற்ற கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பாதியில் பெங்களூரு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : செம்மொழி தமிழாய்வு நிறுவனம்: 12ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்