ராய்ச்சூர்: கர்நாடகா மாநிலத்தில் கிழிந்த 20 ரூபாய் நோட்டுக்காக இரு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மல்லம்மா எனும் பெண்மணி கீதா பாளையத்தில் கடை வைத்து நடத்தி வந்தார். மல்லம்மாவின் கடைக்கு அதே பகுதியை சேர்ந்த ருக்கம்மா என்பவரின் மகள் பொருள் வாங்க சென்றுள்ளார். அப்போது, கடைக்கு வந்த சிறுமியிடம் மல்லம்மா மீதி சில்லரையாக கிழிந்த 20 ரூபாய் நோட்டு கொடுத்துள்ளார்.
மகள் வீட்டிற்கு வந்ததும் இதனை அறிந்த ருக்கம்மா கடைக்கு சென்று மல்லம்மாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.
அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் இருவர் மீதும் விழுந்து, விளக்கு மூலம் இருவர் மீதும் தீ பற்றியுள்ளது. இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் தனித்தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ருக்கம்மா உயிரிழந்தார், மேலும் பலத்த காயமடைந்த மல்லம்மா பெல்லாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சிந்தனூர் கிராமிய காவல் நிலையத்தில் இருதரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போக்சோ வழக்கு ஜாமீனில் வெளியே வந்தவர் தற்கொலை