திருவனந்தபுரம்(கேரளா): கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்ட பல ரசிகர்கள் கேரளாவில் உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே. அந்த வகையில், சமீபத்தில் பிரான்ஸ் VS அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது, (FIFA world cup final) பல மோதல்கள் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பல மாவட்டங்களில் இதற்காக பல இளைஞர்களிடையே நடந்த தாக்குதல்களினால் பலரும் காயமடைந்தனர். இது தவிர, இந்த கால்பந்தாட்ட ரசிகர்களிடையேயான போட்டியின் மற்றொரு செயலாக, இரண்டு போலீஸ்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்ணூர் மாவட்டத்தில், ஃபிஃபா உலக கால்பந்தாட்ட இறுதி விளையாட்டின்போது, இரு அணிகளாகப் பிரிந்த இளைஞர்களிடையே நடந்த மோதலில் அனுராக், ஆதர்ஷ், அலெக்ஸ் ஆண்டனி ஆகியோர் சண்டையிட்டதாகவும், இந்த சண்டையில் பலத்த காயம் அடைந்த அனுராக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கொச்சியில், அர்ஜென்டினாவின் வெற்றியை குடிபோதையில் கொண்டாடிய ரசிகர்களை நிறுத்தியதால், லிபின் என்ற போலீஸ்காரரை கலூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அருண் மற்றும் சரத் என்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொழியூர் பகுதியில் சார்பு காவல் ஆய்வாளரான சஜி என்பவரை, குடிபோதையில் கால்பந்து ரசிகர்கள் சிலர் தாக்கியதால் பலத்த காயமடைந்த அவர், பாறசாலை தாலுகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
’போதையில் ரசிகர்கள் ரகளையை உருவாக்குவது குறித்து சஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சஜி சலசலப்பை கட்டுப்படுத்த சென்றார், ஆனால் கால்பந்து ரசிகர்கள் அவரை தாக்கினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, போலீசாரை தாக்கியவர்கள் அல்லது கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என காவல் துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூகுள் தேடலில் ஹிட் அடித்த ஃபிஃபா இறுதிப்போட்டி - ட்ராஃபிக்கால் ஸ்தம்பித்த கூகுள்!