மும்பை: 59வது ஃபெமினா "மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023" அழகி போட்டியின் இறுதிச்சுற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா, மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நந்தினி குப்தா, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியைச் சேர்ந்தவர். வணிக மேலாண்மை படித்து வரும் இவர், மாடலிங்கில் மிகவும் ஆர்வம் கொண்டவர். மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம், அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள நந்தினி குப்தா தகுதி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், நேற்று(ஏப்.18) தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த நந்தினி குப்தா, "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் கடினமாக உழைத்தேன், அதற்கு பலன் கிடைத்துள்ளது. உலக அழகி போட்டிக்கும் இதேபோல் தயாராகி, வெற்றி பெற்று இந்தியாவைப் பெருமைப்படுத்துவேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "உயிர் உங்களுடையது தேவி": குந்தவையின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!