ஹூப்ளி (கர்நாடகா): ஹூப்ளியின் பிரபல தொழிலதிபர் பாரத் ஜெயின் மகன் அகில் ஜெயின் (30) காணாமல் போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சுபாரி கொடுத்து மகனை தந்தையே கொன்றதாக போலீஸ் சந்தேகிக்கப்படுகிறது.
தொழிலதிபர் பாரத் ஜெயின் மகன், அகில் ஜெயின் டிசம்பர் மாதம் முதல் காணவில்லை என குடும்பத்தினர் கேஷ்வாபூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அகில் பற்றிய தகவல்களை சேகரித்த போலீசாருக்கு பல ஆச்சரியமான உண்மைகள் தெரிய வந்தது. விசாரணையில், அகில் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அதனால் குடும்பத்தினர் அகில் மீது வெறுப்படைந்துள்ளனர்.
அகில் உள்ளிட்ட குடும்பத்தினரின் செல்போன் அழைப்புகளை போலீசார் ஆராய்ந்த போது போலீசாருக்கு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அகிலின் தந்தை பாரத் பிரபல ரவுடிகளுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததே அதிர்ச்சிக்கு காரணம். அகில் காணாமல் போவதற்கு முன் பாரத்துடன் தொடர்பில் இருந்த ரவுடிகள் பிரபல கூலிப்படையினர் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் போலீசார் தொழிலதிபரை அழைத்து விசாரித்தபோது அதிர்ச்சியான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. கூலிப்படையினரை ஏவி மகனைக் கொன்றதாக பாரத் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் இது குறித்து போலீசார் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும் இதுவரை அகிலின் சடலத்தையும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை. எனவே தேவார குடிஹாலாவில் உள்ள பாரத் பண்ணை வீடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அகிலின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையினரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இரண்டு பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!