டெல்லி: சுங்கச் சாவடிகளில் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்படுத்துவதைப் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஒத்திவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் 'FASTag' முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று(ஜன.1) முதல் கட்டாயம் அமலுக்கு வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஃபாஸ்டேக் இல்லாாத வாகனங்களுக்கு இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கட்டாய ஃபாஸ்டேக் நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, கட்டாய ஃபாஸ்டேக் முறையை பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தள்ளிவைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள கட்டண சுங்கச்சாவடிகளின் (hybrid plazas) கலப்பின பாதைகளில், ஃபாஸ்டேக் மூலமாகவும், 2021 பிப்ரவரி 15 வரை பணப் பயன்முறையிலும் கட்டணம் செலுத்த முடியும் என்றும், மத்திய மோட்டார் வாகன (சி.எம்.வி) விதி நடைமுறையில் உள்ளது என்று அமைச்சகம் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சவாடிகளில் நாள்தோறும் 60 லட்சம் வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில் 85 விழுக்காடு வாகனங்கள் ஃபாஸ்டேக் முறைக்கு மாறிவிட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் கூறினர்.