ஸ்ரீநகர்: முன்னாள் முதலமைச்சரும் மக்களவை உறுப்பினருமான டாக்டர். பரூக் அப்துல்லா கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா ட்விட்டரில், “எனது தந்தை கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார், எனது குடும்பத்தாருக்கும் கோவிட் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆகையால் என்னுடன் கடந்த சில நாள்களாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி, மருத்துவ சோதனைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம்தான் பரூக் அப்துல்லா ஷேர் ஐ காஷ்மீர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்நிலையில் அவர் கோவிட் பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கோவிட் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால் சுகாதாரத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது சுற்றுலா சீசன் என்பதால் காஷ்மீரில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.