சண்டிகர் : டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் தாக்கத்தால், நடந்து முடிந்துள்ள ஹரியானா மாநகராட்சித் தேர்தலில் பாஜக தனது வாக்கு வங்கியை இழந்திருக்கிறது. சோனிபட்டில், பாஜக வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளர் நிகில் மதனிடம் படுதோல்வியை சந்தித்துள்ளார். அதேபோல், பாஜக வேட்பாளர் வந்தனா சர்மாவை ஹரியானா ஜான் செட்னா கட்சி வேட்பாளர் தோற்கடித்துள்ளார். இருப்பினும், பஞ்ச்குலா தொகுதியில் பாஜக வேட்பாளர் குல்பூஷன் கோயல் வெற்றிபெற்றுள்ளார்.
சோனிபட்டில் வெற்றிபெற்று மேயராகியுள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிகில் மதன், தேர்தல் முடிவுக்குப் பின்னான ஊடகவியலாளர் சந்திப்பில், சோனிபட்டின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர்கள், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து அதை சரிசெய்வோம் எனக் கூறியுள்ளனர். இந்த மாநகராட்சித் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தாலும், டெல்லி விவசாயிகள் போராட்டம் அதில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஜன்னாயக் ஜனதா கட்சி, தாங்கள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. விவசாயிகள் பெரும்பாலும் உள்ள மாநிலமான ஹரியானாவில் வெளிவந்திருக்கும் தேர்தல் முடிவுகள், பாஜக, அதன் கூட்டணிக்கட்சியான ஜன்னாயக் ஜனதா கட்சி ஆகியவர்களுக்கு எச்சரிக்கை மணியாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: ஜேடியுவின் 17 எம்எல்ஏக்கள் ஆர்ஜேடியுடன் தொடர்பில் உள்ளனர் - ஷியாம் ராஜக்