புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாகப் போராடிவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று விவசாயிகள் சார்பில் சக்கா ஜாம் எனப்படும் சாலை மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 ஆயிரம் பாதுகாப்பு வீரர்கள் தலைநகர் டெல்லியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, இன்றையப் போராட்டத்தில் எந்த அசம்பாவிதமும் நிகழக்கூடாது என்ற நோக்கில் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய உள் துறை அமைச்சகம் மேற்கொண்டுவருகிறது. செங்கோட்டை, ஜம்மா மசூதி, ஜன்பத் சாலை போன்ற முக்கியப் பகுதிகளின் சாலைகள் மூடப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் போராட்டங்களின் முக்கிய மையங்களாக உள்ள சிங்கு, திக்ரி, காசிபூர் எல்லைப் பகுதிகள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்திற்குத் தயாரான அரசு?