சண்டிகர்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் அண்மையில் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் காரை ஏற்றியதில், நான்கு விவசாயிகள் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர்.
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. அந்தக் கொதிப்பு அடங்குவதற்குள் ஹரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக எம்பி நயாப் சைனி காரை ஏற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் பகுதியில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த எம்பி நயாப் சைனி விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் ஒரு விவசாயி பலத்த காயமடைந்தார். அவர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். போராடும் விவசாயிகள் மீது பாஜகவினர் காரை ஏற்றும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி காட்சி!