விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மூன்று வேளாண் சட்டங்களை(Farm Laws) அரசு திரும்பப்பெறுவதாகவும், இம்மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசு முறையாக சட்டத்தை திரும்பப்பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.19) காலை அறிவித்தார்.
’நாடாளுமன்றக் கூட்டத்தில் நீக்குங்கள்’
அதனைத் தொடர்ந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் தங்கள் வீடு திரும்பி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், நாடாளுமன்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை (Farm Laws) நீக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என வேளாண் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் (Rakesh Tikait) முன்னதாக தெரிவித்திருந்தார்.
அடிப்படை ஆதார விலை உத்தரவாதச் சட்டம் வேண்டும்
இந்நிலையில், நமது ஈடிவி பாரத் தளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்த ராகேஷ் திகாயத், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு அடிப்படை ஆதார விலை உத்தரவாதச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பூமி சேனா, ஆதிவாசி ஏக்தா பரிஷத் ஏற்பாடு செய்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 147ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது டிகாயிட் பால்கரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இச்சூழலில் நம்மிடம் பேசிய அவர், ”அரசாங்கத்தின் இந்த முடிவு போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. வேளாண் சட்டங்களால் பாஜக தலைமையிலான அரசாங்கம் நற்பெயரை இழந்துவிட்டது. இறுதி முடிவு எட்டப்படும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும். எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக விவசாயிகள் சங்கம் நாளை மறுநாள் கூட்டத்தைக் கூட்ட உள்ளது” என்றார்.
தனியார்மயமாக்கலுக்கு முக்கியத்துவம்
மேலும், “மோடி அரசு தனியார்மயமாக்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. விவசாய சட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதைத் தவிர இப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை” என்றார்.
விவசாய சங்கம் அடுத்து என்ன செய்யப்போகிறது என்பது குறித்து பேசிய திகாயித், பாராளுமன்ற நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அது அமையும் என்றார்.
இதையும் படிங்க: ’மரியாதை தரவில்லை, மனைவியைப் பற்றி பேசுகிறார்கள்...’ - சட்டப்பேரவையில் உடைந்து அழுத சந்திரபாபு நாயுடு!