கிர் சோம்நாத்: கேரளாவில் பகவந்த் சிங் என்ற மந்திரவாதி, செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு பெண்களை கடத்திச் சென்று நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் மந்திரவாதி பகவந்த் சிங், அவரது மனைவி லைலா, முகமது ஷாபி ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
விசாரணையில், இரண்டு பெண்களையும் கொடூரமாக நரபலி கொடுத்து, உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்டதாகவும், உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்ததாகவும் தெரியவந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷாபி, பகவந்த் சிங்கை திட்டமிட்டு ஏமாற்றி இந்த நரபலியை செய்ததாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதேபோன்ற நரபலி சம்பவம் ஒன்று குஜராத்தில் நடைபெற்றுள்ளது. குஜராத்தில் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒகிராமத்தில் 14 வயது சிறுமியை அவரது பெற்றோரே நரபலி கொடுத்ததாக தெரிகிறது. பணம் கொழிக்கும் என்ற மூட நம்பிக்கையில், நவராத்திரியின்போது (அக். 3) பெற்றோர் தங்களது மகளை பலியிட்டதாக கூறப்படுகிறது.
பண்ணையில் வைத்து சிறுமியை நரபலி கொடுத்ததோடு, அவள் மீண்டும் உயிர்ப்பித்து வருவாள் என்று நம்பி நான்கு நாள்களாக உடலை வைத்திருந்ததாகவும், பின்னர் பண்ணையிலேயே வைத்து ரகசியமாக உடலை தகனம் செய்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை பவேஷிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாகவும், இதுதொடர்பாக தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கிர் சோம்நாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர்சிங் ஜடேஜா தெரிவித்துள்ளார்.