ஜபுவா: மத்திய பிரதேசத்தில் மாநில அரசு சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. தம்பதியருக்கு அரசு தரப்பில் சீர் வரிசை பொருட்களும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஜபுவா மாவட்டம் தண்ட்லா பகுதியில், முதலமைச்சர் மகளிர் திருமண திட்டத்தின் கீழ் 292 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் மணமக்களின் குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அரசு தரப்பில் விருந்தும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தம்பதியருக்கு சீர் வரிசை பொருட்கள், மணமகள்களுக்கான பிரத்யேக மேக்-அப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மேக்-அப் பாக்ஸில், கருத்தடை மாத்திரைகள் இருந்ததால் திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையறிந்த சிலர், திருமண விழாவை ஏற்பாடு செய்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தம்பதியருக்கு இதுபோன்ற மாத்திரகளை வழங்கக் கூடாது என்றும், தகராறு செய்தனர். இதனால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் செய்த பொதுமக்களை, அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
இதுகுறித்து திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், "மணமகள்களுக்கென பிரத்யேகமாக மேக் அப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. அதை திறந்து பார்த்த போது, சில அலங்காரப் பொருட்கள் இருந்தன. அவற்றுடன் 'MALA - N' கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. திருமணம் முடித்த தம்பதியருக்கு இதுபோன்ற மாத்திரைகளை வழங்கக் கூடாது. இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது தவறானது" என்றனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரி தாகூர் கூறும்போது, ”மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக புதுமண தம்பதியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது எங்கள் கடமை. அதைத் தான் செய்து வருகிறோம். மக்கள் தொகை பெருக்கம் குறித்து தம்பதியர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன" என்றார்.
ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலம் திந்தோரி பகுதியில், அரசு தரப்பில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின் போது, மணப்பெண்களை கர்ப்ப பரிசோதனைக்கு அதிகாரிகள் அறிவுறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கருத்தடை மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முன்னதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக மக்கள் தொகை குறித்த அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில் இதுவரை அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை விட, 29 லட்சம் பேரை அதிகமாகக் கொண்டு இந்தியா முதலிடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.