ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த முஜ்தபா அகமது என்பவர் மருந்தியல் படிப்பு பாதியில் நிறுத்திவிட்டு உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இதன் பின் 2018ஆம் ஆண்டு சிந்தல் பகுதியில் ஹெல்த்கேர் பார்மசி என்ற பெயரில் மருந்துக்கடையை தொடங்கினார்.
இங்கு வரும் நோயாளிகளிடம் தன்னை மருத்துவர் எனக்கூறிக்கொண்டு, மருந்து எழுதி கொடுப்பது, குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பரிந்துரைப்பது என்று ஏமாற்றி வந்தார். இதனிடையே கடந்த வாரம் இவரிடம் மருத்துவம் பார்க்க வந்த ஒருவருக்கு சந்தேகம் ஏற்படவே இவர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் அவரிடம் வாராங்கல் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முஜ்தபா அகமது போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து போலி மருத்துவச் சான்றிதழ்கள், ரூ.1.90 லட்சம் ரொக்கம், ஒரு மடிக்கணினி, மூன்று செல்போன்கள், ஆய்வகக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட தகவலில், கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30-40 பேர் வீதம் சுமார் 43 ஆயிரம் பேருக்கு போலியாக மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: மயக்க ஊசி செலுத்தி நகை திருட்டு; போலி மருத்துவர் கைது