நம் நாட்டில் பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் பத்து நாள்கள் கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபாடு
ஒன்பது இரவுகள், 10 நாள்கள் என்று கொண்டாடப்படும் இந்த நவராத்திரிப் பண்டிகையின்போது, துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. தீமைக்கு எதிரான நன்மையும் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இந்தப் பண்டிகை அமைந்துள்ளது.
துர்கா தேவி வழிபாடுகள் நவராத்திரியில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு, நவராத்திரி அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அன்று தொடங்கி, அக்டோபர் 15ஆம் தேதி விஜய தசமி அன்று நிறைவு பெற்றது.
வெளி மாநில பக்தர்கள் கொண்டாட்டம்
இதனையொட்டி புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி உத்சவ் விழாவில் ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு துர்க்கையின் புகழ் பாடி இரண்டு கைகளிலும் குச்சிகளைத் தாங்கி, இசைக்குத் தகுந்தவாறு தாண்டியா நடனம் ஆடினர்.
இதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் பூஜையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வெளிமாநில ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
ஏராளமான பெண்கள் ஒன்றுகூடி வண்ண வண்ண உடைகள் அணிந்து தாண்டியா நடனம் ஆடிய இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதையும் படிங்க: நவராத்திரி உற்சவம்: ஜொலி ஜொலித்த காஞ்சி காமாட்சியம்மன் - பக்தர்கள் மெய்சிலிர்ப்பு