லக்னோ: அகிலேஷ் யாதவ் முன்னிலையில் புகழ்பெற்ற உருது கவிஞர் முனாவார் ராணாவின் மகள் சுமயா ராணா, சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அவர், அனைத்து சமுதயாத்தினரின் நலனுக்காகவும் உழைக்க வேண்டும் என்ற சமாஜ்வாதி கட்சியின் கொள்கை என்னை வெகுவாக கவர்ந்தது. 2022ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்ததும், சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது யோகி அரசாங்கம் தொடுத்துள்ள வழக்குகள் அனைத்தையும் அகிலேஷ் ரத்து செய்வதாக எனக்கு உறுதியளித்துள்ளார்.
இந்தக் கட்சியில் நான் எந்தவித நிபந்தனைகளுமின்றி இணைந்தேன். ஆனால், எனக்கு சில கோரிக்கைகள் இருந்தன. அதனை கட்சித் தலைமை ஏற்றுக்கொண்டது. மக்கள் நலனுக்காக பாடுபடும் வேலையை தொடர்ந்து செய்வேன் என்றார்.
இஸ்லாமியர்களுக்கு சமாஜ்வாதி கட்சியின் பங்களிப்பு என்ன என்ற கேள்விக்கு, இஸ்லாமிய சமுதாயத்தின் நலனுக்காக முலாயம் சிங் யாதவ் பலவற்றை செய்திருக்கிறார். உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உருது மொழியை இரண்டாவது மொழியாக அறிவித்தார். உருது ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தார் என சுமயா கூறினார்.
மேலும், கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்றார். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் அறியப்பட்டவர் சுமயா ராணா. அவர் மீதும், அவரது தங்கை பவுசியா ராணா மீது உபி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.