மகாராஷ்டிராவில் காவல் முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங், அம்மாநில உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம் ரூ.100 கோடி வசூல் செய்து தர வேண்டும் என தன்னை வற்புறுத்தியதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதையடுத்து அனில் தேஷ்முக் பதவி விலகக்கூறி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன. இதற்கு தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "அனில் தேஷ்முக்கைக் காப்பாற்ற பலரும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். இவ்விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உண்மையை மறைத்துப் பேசுகிறார். விரைவில் உண்மைகள் அனைத்து வெளியில் வரும். என்னிடம் 6.3 ஜிபி அளவிலான தகவல்கள் ஆதாரமாக உள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய உள் துறைச் செயலரை சந்தித்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: ’போட்டோல இருக்கறது நான்தான், ஆனா எனக்கு வீடு தரல’ - அவாஸ் யோஜனா விளம்பரத்தில் இடம்பெற்ற பெண் மறுப்பு