பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பி.எஸ். எடியூரப்பாவின் பேத்தி சௌந்தர்யா (30), பெங்களூரு வசந்தா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர், எடியூரப்பாவின் இரண்டாவது மகள் பத்மாவதியின் மகள் ஆவார்.
பெங்களூரு ஹை-கிரவுண்டஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சௌந்தர்யாவின் உடல் பெங்களூரு போரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பணியாளர்களிடம் விசாரணை
பெங்களூரு எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் சௌந்தர்யாவுக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு நீரஜ் என்ற மருத்துவர் உடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.
சௌந்தர்யாவின் வீட்டில் பணியாற்றும் கவாஜா ஹூசைன் கூறுகையில்," நீரஜ் காலை 8 மணியளவில் பணிக்குச் சென்றுவிட்டார். அவர் புறப்பட்ட பின்னரே சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டுள்ளார். சௌந்தர்யா உடன் தான் அவரின் கைக்குழந்தையும் இருத்தது. மேலும், பணியாளர்களும் வீட்டில் தான் இருந்தோம்.
முதல் கட்ட தகவல்
வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணி, சௌந்தர்யாவுக்கு சாப்பாடு கொண்டுசென்ற போதுதான் அவர் அறையில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது” என்றார்.
சௌந்தர்யாவும் நீரஜ்ஜூம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், சௌந்தர்யா குழந்தை பெற்ற பின்பு, நீண்ட நாள்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
மேலும், வீட்டில் இருக்கும் பணியாளர்களிடம் விசாரித்ததில், நீரஜ்ஜூம் சௌந்தர்யாவும் நெருக்கமாகதான் வாழ்ந்து வந்தனர் என்றும் இருவருக்கும் எந்த தகராறும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை