இன்றைய முக்கிய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு.
- பசவராஜ் பொம்மாய் பதவியேற்பு: கர்நாடக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து பி.எஸ். எடியூரப்பா விலகிய நிலையில், அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மாய் புதன்கிழமை (ஜூலை 28) காலை 11 மணிக்கு மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்கிறார்.
- திமுக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்: நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் என தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக இன்று போராட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறும் என அதிமுக ஒரங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
- வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதவிர மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
- தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி பயிலும் இளநிலை மாணவர்களுக்கு கடந்தாண்டு டிசம்பரில் நடைபெற்ற பருவகால முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன.
- அஜித் தோவல்- ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு: இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் புதன்கிழமை (ஜூலை 28) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.
- பெகாசஸ்- ஒத்திவைப்பு தீர்மானம்: 17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் இன்று (ஜூலை 28) எதிர்க்கட்சிகள் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரவுள்ளனர்.
- தஜிகிஸ்தானில் ராஜ்நாத் சிங்: தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் துஷான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு புதன்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார்.
- ஒன்றிய அமைச்சரவை கூட்டம்: நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இதையும் படிங்க : 800 ஆண்டுகள் அதிசயம்.. மிதக்கும் கல்லால் கட்டப்பட்ட சிவன் கோயில்!