டெல்லி: அண்மை காலமாக விமான பயணத்தின் போது பயணிகளின் செயல்கள் விமான நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. எமர்ஜென்சி எக்சிடை திறந்தது, சக பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினகள் பூதாகரம் அடைந்து வருகின்றன.
அந்த வகையில் மேலும் ஒரு சம்பவமாக, சென்னையில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்த விமானத்தில் எமர்ஜென்சி எக்சிடை தொட்டுப்பார்த்த கல்லூரி மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி விமானம் சென்றுள்ளது.
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவனில் பறந்து கொண்டு இருந்த நிலையில், விமானத்தில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவர், எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால கதவை தொட்டுப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட விமான சிப்பந்திகள் உடனடியாக இளைஞரை தடுத்து உள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக விமானிக்கு, சிப்பந்திகள் தகவல் அளித்துள்ளனர். விமானம் தரையிறங்கியதும் இது குறித்து விமான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். கல்லூரி மாணவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி விட்டு திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய போலீசார், பயணத்தின் போது தெரியாமல் விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட்டை தொட்டுப் பார்த்த்தாக பொறியியல் மாணவர் தெரிவித்ததாக கூறினர். மேலும் சம்பவம் தொடர்பாக மாணவர் கைது செய்யப்படவில்லை என்றும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும் என போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் 70 இடங்களில் என்.ஐ.ஏ திடீர் சோதனை - ஆயுதங்கள் சிக்கியதாக தகவல்!