ஸ்ரீநகர் (ஜம்மு-காஷ்மீர்): பணமோசடி வழக்கு தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் (JKNC) கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லாவை இன்று (ஜன.11) விசாரணைக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் அழைத்துள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டில், ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் (JKCA) நிதி மோசடி செய்யப்பட்டதாக வழக்குப் பதியப்பட்டது.
இந்த நிலையில், ஜேகேசிஏ அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சங்கத்திற்கு தொடர்பில்லாத பல்வேறு தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியது மற்றும் ஜேகேசிஏ வங்கிக் கணக்குகளில் இருந்து உரிய விளக்கம் இல்லாமல் பணம் எடுக்கப்பட்டது என்று பல பிரிவுகளின் கீழ், ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய ஆறு அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் (JKNC) கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஆகியோர் மீது பணமோசடி வழக்கு பதியப்பட்டது.
இதனை அடுத்து, கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அன்று சிபிஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை அடிப்படையாக வைத்து பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது.
மேலும் அதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்த வழக்கில் ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாது, இந்த வழக்கில் இதுவரை பணமோசடியின் மூலமாக 51.90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும், அதில் 21.55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, ஜம்மு - காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் அப்போதைய பொருளாளராக இருந்த அஹ்சன் அஹமத் மிர்சாவை, கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி அன்று கைது செய்தது, மேலும் அவருக்கு எதிராக, 2019ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமர் கோயில் பிரதிஷ்டை - காங்கிரஸ் புறக்கணிப்பு! சொன்ன காரணம் என்ன தெரியுமா?