ஜெர்மனி (முனிச்): ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 26) அங்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜெர்மனி வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், "இந்தியர்களாகிய நாம் அனைவரும் நம் நாட்டின் ஜனநாயகத்தை நினைத்து பெருமைப்படலாம். இந்தியா, ஜனநாயகத்தின் தாய் என்று பெருமையுடன் கூறலாம். கலாசாரம், உணவு, உடை, இசை மற்றும் பாரம்பரியங்களின் பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தை துடிப்புடன் வைத்திருக்கிறது. இந்திய ஜனநாயக அரசியல் வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் இன்று திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக மாறியுள்ளது. அனைத்து கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஏழை மக்கள் 5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை தற்போது பெற முடியும்.
கடந்த நூற்றாண்டில் தொழில் புரட்சியால் ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் பலன் அடைந்தன. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது. ஆனால், தற்போதுள்ள 4ஆவது தொழில் புரட்சியில் இந்தியா பின்வாங்காது. மொபைல் இணைய சேவை மிகவும் மலிவாக கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு