ஒடிசாவில் உள்ள முன்டாலி பாலத்தின் அருகே யானை ஒன்று மகாநதி ஆற்றை நேற்று (செப் 24) கடக்க முயன்றது. அப்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அந்த யானை சிக்கியது. இதை அறிந்த உள்ளூர் வாசிகள் இத்தகவலை வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தனர்.
உடனடியாக, மீட்பு நடவடிக்கையில் வனத்துறையினர் களமிறங்கியுள்ளனர். இந்த மீட்பு பணியில் வனத்துறை, பேரிடர் மீட்புக் குழுவுடன் இணைந்து அரிந்தாம் தாஸ் என்ற செய்தியாளரும் அவருடன் பணிபுரியும் ஒளிப்பதிவாளரும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக நதியில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கவே, செய்தியாளர் அரிந்தாம் தாஸ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் அம்மாநில மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒடிசாவின் பிரபல செய்தியாளரான அரிந்தாம், புயல், வெள்ளம், காட்டுத்தீ உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களை களத்திலிருந்து சிறப்பாக மக்களிடம் கொண்டுசேர்ப்பவர். 39 வயதான இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.
இவரது மறைவுக்கு ஒடிசா ஆளுநர் கணேசி லால், முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிமைப் பணித்தேர்வு முடிவு 2020: முதலிடம் பெற்ற பிகாரைச் சேர்ந்த சுபாம்குமார்