இமாச்சல் பிரதேசத்தில் வரும் நவம்பர் 12ஆம் தேதி சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்தியத்தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் கூறுகையில், இம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 12ஆம் தேதி நடக்கும் என்றும், வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மொத்தம் 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்டிருக்கும் இம்மாநிலத்தில் 55 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தில் முதல்முறை வாக்காளர்கள் 1.86 லட்சம் பேரும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1.22 லட்சம் பேரும், 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,184 பேரும் உள்ளனர். 68 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப்பிரதேசத்தில், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 44 இடங்களைக் கைப்பற்றி வென்றது. அப்போது, காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. விழுக்காடு அடிப்படையில் பார்க்கையில், மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 48.79 விழுக்காடு வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 41.68 விழுக்காடும் மற்றும் சுயேச்சைகள் 6.34 விழுக்காடும் பெற்றுள்ளன.