தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று (பிப்.26) வெளியிட்டது.
டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஐந்து மாநிலங்களில் 16.68 கோடி வாக்காளர்கள் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
கரோனா காரணமாக ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் தேர்தல் மேற்பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
சுனில் அரோரா வெளியிட்ட அறிவிப்பின்படி, அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டம் மார்ச் 27 தேதியும் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1ஆம் தேதியும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 6ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
வரும் ஏப்ரல் 6ஆம் தேதி, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு, மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவுள்ளது.
மேற்குவங்க தேர்தல் தேதி விவரம்:
முதல் கட்டம் - மார்ச் 27
இரண்டாம் கட்டம் - ஏப்ரல் 1
மூன்றாம் கட்டம் - ஏப்ரல் 6
நான்காம் கட்டம் - ஏப்ரல் 10
ஐந்தாம் கட்டம் - ஏப்ரல் 17
ஆறாம் கட்டம் - ஏப்ரல் 22
ஏழாம் கட்டம் - ஏப்ரல் 26
எட்டாம் கட்டம் - ஏப்ரல் 29
ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.