டெல்லி : நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை (1 பில்லியன்) தாண்டியுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (அக்.22) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “பாஜக அரசாங்கம் சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் அவுர் சப்கா பிரயா என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்துவருகிறது.
தடுப்பூசி இயக்கம்
இந்த தாரக மந்திரத்தின் நோக்கம், “அனைவரின் ஆதரவும், அனைவரின் வளர்ச்சியுடன் சேர்ந்து அனைவரின் நம்பிக்கையும்” என்பதே ஆகும். இதன் வாழும் உதாரணமாக நாட்டில் தடுப்பூசி இயக்கம் திகழ்கிறது. நமது தடுப்பூசி இயக்கத்தில் அச்சங்கள் இருந்தன. ஆனால் நாம் அரிய சாதனையை அடைந்தோம்.
100 கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் அல்ல... இது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம், இந்தியா ஒரு கடினமான இலக்கை வெற்றிகரமாக அடைய முடியும் என்பதற்கான சான்று. இந்தியா, தனது இலக்குகளை நிறைவேற்ற கடினமாக உழைக்கிறது என்பதை இது காட்டுகிறது.
முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை
நாட்டின் சாதனை வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. நாட்டில் கோவிட்-19 வைரஸ் பரவியபோது அது வலிமிக்கதாக இருந்தது. இந்த வலி நம்மை வலிமைமிக்கதாக மாற்றிவிட்டது. நாட்டில் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டபோது, அவநம்பிக்கை மற்றும் பீதியை உருவாக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் நடந்தன.
இருந்தபோதிலும், தடுப்பூசிகள் மீதான மக்களின் நம்பிக்கையின் வெற்றிக்கு காரணமாக இது அமைந்துள்ளது. நாட்டில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன்பின்னர், மார்ச் 1ஆம் தேதி முதல் மாநில மற்றும் மத்திய போலீஸ் பணியாளர்கள், ஆயுதப்படை, வீட்டு காவலர்கள், சிவில் பாதுகாப்பு மற்றும் பலர் தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர்.
இலவச தடுப்பூசி சாதனை
தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்குள்பட்ட இணை நோய் உள்ளவர்கள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டனர். இன்று தற்போது நாம் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.
பெரும் மக்கள்தொகையை கொண்ட இந்தியா தடுப்பூசிகளை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவார்கள் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை பதிலளித்துள்ளது.
அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம்” என்றார்.
கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி இயக்கம் நாடு முழுக்க நடப்பாண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 100 கோடி கரோனா தடுப்பூசி.. இந்தியா வரலாற்று சாதனை!!