மங்களூரு(கர்நாடகா): உடுப்பி மாவட்டம், குந்தாப்பூர் வட்டத்தைச்சேர்ந்த 80 வயது மூதாட்டி, அஸ்வத்தம்மா. இவர் தான் யாசகம் பெற்ற பணத்தினை சேகரித்து வைத்து, மங்களூருவின் அருகில் உள்ள பாப்பநாடு துர்கா பரமேஸ்வரி கோயிலுக்குச்சென்று, ரூ. ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். இவ்வாறு, அஸ்வத்தம்மா இதுவரை பல்வேறு கோயில்களுக்கு சுமார் 9 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
கடந்த 17ஆம் தேதி, மங்களூருவின் புறநகர் பகுதியில் உள்ள முல்கி என்னும் கிராமத்தில் உள்ள பாப்பநாடு ஸ்ரீ துர்காபரமேஸ்வரி கோயிலுக்குச் சென்ற இவர், கோயிலின் அன்னதானத்திற்காக 1 லட்சம் ரூபாயை வழங்கினார். இந்த காணிக்கையை ஏற்றுக்கொண்ட கோயில் அர்ச்சகர் நரசிம்ம பட், அஸ்வத்தம்மாவுக்கு பிரசாதம் வழங்கினார். அக்கோயிலின் நிர்வாகிகள் முன்னிலையில் அஸ்வத்தம்மா பாட்டி கவுரவிக்கப்பட்டார்.
அஸ்வத்தம்மாவின் கதை:
பல ஆண்டுகளாக கோவில்கள், டோல்கேட்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிச்சை எடுத்து சேகரித்த பணத்தை சேமித்து, கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.
சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அஸ்வத்தம்மாவிற்கு அவரது இரண்டு குழந்தைகளின் மரணம் மற்றொரு பெரிய பின்னடைவாக இருந்தது. அதில் வெறுப்படைந்த அவர், சாலிகிராம் குரு நரசிம்மர் கோயில் அருகே பிச்சை எடுத்து, அதன் அருகே அனுமதிபெற்று தங்கத் தொடங்கினார். பின், அதன்மூலம் கிடைத்த வருவாயை, சாலிகிராமில் உள்ள குரு நரசிம்ம கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார். அதன் பிறகு பல கோயில்களுக்கு நன்கொடை அளித்து வருகிறார்.
கரோனா காலத்தில் அஸ்வத்தம்மா, ஐயப்பனுக்கு மாலையணிந்து சபரிமலை சென்று, அங்கும் அன்னதானத்திற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கினார். அதன்பின், கங்கொல்லி கோயிலுக்கு 1 லட்சம் ரூபாயும், கஞ்சுகோடு குந்தாப்பூர் கோயிலுக்கு 1 லட்சம் ரூபாயும், பொளாளி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலுக்கு 1 லட்சம் ரூபாயும், பொளாளி அகிலேஸ்வரி கோயிலுக்கு 1 லட்சம் ரூபாயும் அன்னதானம் வழங்கினார்.
இத்தனை ஆண்டுகளில் தனது அடிப்படைத் தேவைக்குக் கூட அஸ்வத்தம்மா தனக்காக பணம் செலவழிக்கவில்லை; மாறாக, கோயிலில் இருந்து உணவுப்பிரசாதத்தை மட்டுமே பெற்றுக்கொள்கிறார்.
இதையும் படிங்க: உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்துடன் ஓடிய குரங்கு; ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்