டெல்லி: இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021ஆண்டு தகவல் தொடர்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 8 யூடியூப் செய்தி சேனல்கள், 1 முகநூல் கணக்கு, 2 முகநூல் பதிவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு ஆக.16ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் மொத்தமாக, 114 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளன.
இந்த யூடியூப் சேனல்களில், இந்தியாவில் மத நல்லிணக்கத்துக்கு மாறாக வெறுப்பை தூண்டும் வகையில் உரிமைகள் தொடர்பான தவறான தகவல்கள் பதிவேற்றப்பட்டிருந்தன. குறிப்பாக, மதம் குறித்த கட்டமைப்புகளை தகர்த்தெறிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், மதப்பண்டிகைகளைக் கொண்டாட மத்திய அரசு தடை விதித்து, மதப்போரை அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த செய்திகள் நாட்டில் மதக்கலவரத்தை தூண்டி, பொதுஒழுங்கை சீர்குலைக்க கூடியவையாகும். அதோடு இந்த சேனல்கள், ஜம்மு காஷ்மீர் குறித்த பல்வேறு பொய்யான தகவல்களையும் பதிவேற்றியிருந்தன. தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நட்புறவு தொடர்பான இந்த தகவல்கள் முற்றிலும் தவறான கண்ணோட்டம் கொண்டதாக உள்ளன.
இவை அனைத்தும் இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவு, நாட்டின் பொதுஅமைதி ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த யூடியூப் சேனல்கள், போலியான மற்றும் பரபரப்பான சிறுபடங்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களின் படங்கள், சில செய்தி தொலைக்காட்சிகளின் லோகோக்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை தவறாக வழிநடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் முதல், 102 யூடியூப் செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை தடை செய்வதற்கான நெறிமுறைகளை அமைச்சகம் வெளியிட்டது. உண்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் பாதுகாப்பான இணையவழி சுற்றுச்சூழலை உறுதி செய்வதிலும், இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் பொதுஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியை முறியடிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், "மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மாநிலங்களவையில் கூறுகையில், "நாட்டின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இதனை சாதகமாக கொண்டு, பல்வேறு யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பொய்யான தகவல்கள் பரப்பட்டு வருகின்றன. அதன்காரணமாக, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் போலியான மற்றும் தேசவிரோத செய்திகளை வெளியிட்ட யூடியூப், ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 60 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
அதேபோல பத்திரிகையாளர்கள் நெறிமுறைகளை பின்பற்றி செய்திகளை வெளியிடும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மீறுவோர் மீது பிரிவு 14ன் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடு முழுவதும் போலி செய்திகள் பரப்புவது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன. இதனால் அரசு சார்பில் செய்தியின் உண்மைத்தன்மை சரிபார்ப்புப் பிரிவை நிறுவியுள்ளோம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஞானவாபி மசூதி வழக்கை தொடர்ந்த பெண்ணின் கணவருக்கு கொலை மிரட்டல் - வழக்குப்பதிவு!