மோதிஹாரி : பீகாரில் களப்பட மது மற்றும் கள்ளச் சாராயத்தால் ஏற்படும் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சாப்ரா, சிவான் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. எல்லை மீறி நடைபெறும் கள்ளச் சாராய விற்பனையால் பல்வேறு குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் சம்பரான் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வறட்சி நிறைந்த பகுதியாக காணப்படும் சம்பரானில் திடீர் திடீர் என கிராம மக்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் அஜீரணக் கோளாறு மற்றும் தொடர் வயிற்று போக்கு பாதிப்புகளால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாக உயிரிழப்பு நேர்ந்ததாகவும் உள்ளூர் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தில் மோதிஹாரி கிராமத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். உயிரிழந்த 8 பேரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள நிலையில், பரிசோதனையின் முடிவில் இறப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என கூறப்பட்டு உள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் சிலர் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பயந்து உயிரிழந்தவர்களின் உறவினர்களை அவர்களை அவசர அவசரமாக தகனம் செய்ததாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : கர்நாடக தேர்தலில் களமிறங்கும் தேர்தல் மன்னன் பத்மராஜன்.. யாருக்கு எதிராக போட்டி தெரியுமா?