ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காவல்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் போலி பேடிஎம் செயலியைக் கொண்டு கடைகளில் மோசடி செய்த எட்டு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் அன்ஜனி குமார் கூறுகையில், "கைது செய்யப்பட்ட நபர்கள் கடைகளுக்கு சென்று தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு கடைக்காரர்களிடம் பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதாகக் கூறி செல்கின்றனர். பின்னர், போலி பேடிஎம் செயலிகளைக் கொண்டு தாங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டதாக கடைக்காரர்களிடம் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.
அவர்களும் இதனை நம்பி வாடிக்கையாளர்களை அனுப்பிவிடுகின்றனர். ஆனால், பின்னர் தங்களது வங்கிக் கணக்குகளை சரிபார்க்கும் போது அவர்கள் செலுத்திய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படாதது தெரியவருகிறது. குறிப்பிட்ட சில நபர்கள் செலுத்தும் தொகை மட்டும் இவ்வாறு வங்கிக் கணக்கில் வராமல் இருப்பதாகத் தெரிந்ததையடுத்து, கடைக்காரர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கூகுள் பிளே ஸ்டோரில் இதுபோன்ற செயலிகள் உள்ளன. இவற்றை தங்களது செல்போனிற்கு வரும் வீடியோக்களின் மூலம் அறிந்துகொண்டு பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகிறோம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பல போலியான பணப்பரிமாற்ற செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இன்னும் சில செயலிகள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளன. இவற்றிடமிருந்து மக்களும், கடைக்காரர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" எனக் காவலர்கள் கேட்டுக்கொண்டார்.