ஹைதராபாத்: நாம் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்ளும் உப்பில் உள்ள சோடியம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து. இந்த சோடியம் உப்பு மட்டுமல்லாமல், மசாலா பொருட்கள், ஜங்க் புஃட்ஸ் உள்ளிட்டவற்றிலும் அதிகளவு உள்ளது. சோடியம் அத்தியாவசியமான ஊட்டச்சத்து என்றாலும், அதனை அதிகமாக உட்கொண்டால், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
உப்பை உட்கொள்வதால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து நீண்ட ஆய்வுகளை மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உப்பின் நுகர்வை குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது.
இந்த நிலையில், சோடியம் நுகர்வு குறைப்பு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையின்படி, உலக மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட அளவில் உப்பை உட்கொள்கிறார்கள் என்றும், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகளில் 73 சதவீத நாடுகள், உப்பு நுகர்வு குறைப்பு கொள்கையை முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
உலகில் ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 10.8 கிராம் உப்பை உட்கொள்வதாக தெரியவந்துள்ளது. இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அதேபோல், அதிகப்படியான உப்பு நுகர்வு, ஊட்டச்சத்து தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணியாக உள்ளதாகவும், இந்த உப்பு நுகர்வு, இரைப்பை புற்றுநோய், உடல் பருமன், ஆஸ்டியோபோரோசிஸ், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உப்பு நுகர்வு குறைப்பு கொள்கையை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தினால், 2030ஆம் ஆண்டில் உலகளவில் 70 லட்சம் உயிர்களை காப்பாற்றலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து சார்ந்த நோய்களால் ஏற்படும் இறப்புகளை குறைக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிரேசில், சிலி, செக் குடியரசு, லிதுவேனியா, மலேசியா, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய நாடுகளில் மட்டுமே உப்பு நுகர்வு குறைப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, "உலகில் இறப்பு மற்றும் நோய்களுக்கு ஆரோக்கியமற்ற உணவுகளும் முக்கிய காரணமாகும். இதில் அதிகப்படியான சோடியம் உட்கொள்ளல் முக்கிய காரணியாக இருக்கிறது. பெரும்பாலான நாடுகள் உப்பு நுகர்வு குறைப்புக் கொள்கைகளை கடைப்பிடிக்கவில்லை. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. உப்பு நுகர்வு தொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் கீழ்க்கண்ட பரிந்துரைகளை பின்பற்றினால், அது சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
- உப்பு அளவு குறைவாக இருக்கும் வகையில் உணவுகளை தயாரிக்க வேண்டும், உணவுகளில் சேர்க்க வேண்டிய சோடியத்தின் அளவை நிர்ணயிக்க வேண்டும்
- மருத்துவமனைகள், பள்ளிகள், பணியிடங்கள் போன்ற பொது இடங்களில் உப்பு நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும்
- உணவு பாக்கெட்டுகளில் சோடியம் அளவை குறிப்பிடுவதால், குறைவான சோடியம் உள்ள உணவுகளை மக்கள் தேர்ந்தெடுக்க முடியும்
- உப்பு நுகர்வை குறைப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
இந்த கட்டாய சோடியம் குறைப்பு கொள்கைகளை உலக சுகாதார நிறுவனத்தின் அனைத்து உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும். அதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். உணவு உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் சோடியம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.