டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பகம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம், வட்டியில்லாமல் 90.25 கோடி ரூபாய் கடனை காங்கிரஸ் கட்சியிடம் வாங்கியதாகவும் அதனை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 2010ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து பங்குகளை வாங்கியதாகவும் இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தற்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவரும் மக்களவை தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், வழக்குரைஞருமான அபிஷேக் சிங்வி, மத்திய அரசு அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது. 1942ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடங்கியபோது, ஆங்கிலேயர்கள் அதை ஒடுக்கினார்கள். தற்போது மோடி அரசும் அதையே செய்கிறது. அதற்கு அமலாக்கத்துறை துணைப்போகிறது" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியினர் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுகின்றனர் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!