டெல்லி: டெல்லியில் கடந்த 2021-22ஆம் ஆண்டு கலால் கொள்கையில் மாற்றங்களை செய்து, விதிகளை மீறி தனியார் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கியதாகவும், இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது பாஜகவினர் புகார் தெரிவித்தனர். இந்த வழக்கு பூதாகரமான நிலையில் கடந்த ஆண்டு புதிய கலால் கொள்கையை ரத்து செய்த ஆம் ஆத்மி அரசு, மீண்டும் பழைய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது.
இந்த வழக்கில் கலால் துறையை வைத்திருந்த டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். மத்திய பாஜக அரசு திட்டமிட்டு தங்களை அச்சுறுத்துவதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை கைது செய்தது. சிபிஐ வழக்கில் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் சட்டவிரோதப் பணப்பறிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணீஷ் சிசோடியாவை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் வரும் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் மணீஷ் சிசோடியா 14 செல்போன்களில் சுமார் 43 சிம்கார்டுகளைப் பயன்படுத்தியதாகவும், அதன் பிறகு அந்த செல்போன்களை அழித்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட அந்த செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளின் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அந்த 43 சிம்கார்டுகளில் 5 மட்டுமே சிசோடியாவின் பெயரில் வாங்கப்பட்டவை என்றும், சில செல்போன்கள், தேவேந்தர் சர்மா, சுதிர் குமார், ஜாவேத் கான் உள்ளிட்டோரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவேத் கான் பெயரில் வாங்கப்பட்ட செல்போன் மூலம் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளரான தேவேந்தர், கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிசோடியா சார்பில் சிலரிடம் பேசியதாகவும், ஓடிபி உள்ளிட்டவற்றை பகிர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், செல்போன் ஃபார்மட் செய்யப்பட்டதால், எதற்காக ஓடிபி பகிரப்பட்டது என்ற தகவலை மீட்க முடியவில்லை என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல், கடந்த 2022ஆம் ஆண்டு ஐஃபோன் 13 மேக்ஸ் ப்ரோ செல்போனை சுமார் 11 மாதங்களாக பயன்படுத்தி வந்ததாகவும், கலால் ஊழல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்ட சமயத்தில் அந்த செல்போனை சிசோடியா அழித்துவிட்டதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். சிபிஐ தனது உடைந்துபோன ஒரு செல்போனை கைப்பற்றியதாகவும், அந்த செல்போன் தற்போது எங்கே இருக்கிறது என்று தனக்கு தெரியாது என்றும் சிசோடியா அமலாக்கத்துறையினரிடம் கூறியதாக தெரிகிறது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை இதுவரை நான்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.