அவுரங்காபாத்: வீடில்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் வீடு கட்டும் திட்டம் (PM Awas Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2022ம் ஆண்டுக்குள் ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வீடுகள் கட்டித்தரப்படுகின்றன.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவுரங்காபாத் மாநகராட்சி துணை ஆணையர் அபர்ணா தியேட் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "சமர்த் கன்ஸ்ட்க்ரசன், ஜாக்குவர் குளோபல் சர்வீசஸ், இந்தோ-ஐ குளோபல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்கள், பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்காக ஒரே கணினியில் டெண்டர் கோரியுள்ளன. இது மாநகராட்சியின் விதிகளுக்கு முற்றிலும் மாறானது. இது மாநகராட்சி நிர்வாகத்தை மோசடி செய்தது மட்டுமின்றி, அரசுக்கு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் செயல் ஆகும்.
3 நிறுவனங்களின் நிதிப்பற்றாக்குறை காரணமாக பிரதமரின் வீடு கட்டும் திட்டம் செயல்டுத்தப்படவில்லை. 4 இடங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்ட 4 டெண்டர்கள் கோரப்பட்டன. இதில் 3 நிறுவனங்கள் இணைந்து ஒரு டெண்டரை கோரியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக வீட்டு வசதித்துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் விசாரணையின் முடிவில், இத்திட்டத்தில் எத்தனை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக இன்று (மார்ச் 17) சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒப்பந்ததாரரின் வீடு, மருத்துவரின் வீடு உட்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவுரங்காபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 7 இடங்களில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 39,730 வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை 7,000 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பயனாளிகளின் எண்ணிக்கை 40,000ஆக உயர்த்தப்பட்டு, 86 ஹெக்டேர் பரப்பளவில் வீடுகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: இமாச்சலில் ஒரு மதுபாட்டிலுக்கு ரூ.10 வரி விதிப்பு: பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்ன?