மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உதவியாளரை அமலாக்கத்துறை அலுவலர்கள் கைதுசெய்தனர்.
அனில் தேஷ் அமைச்சராக இருந்தபோது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, மும்பை கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் அளித்த புகாரில், “மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து கொடுக்க வேண்டும்” என்று அனில் தேஷ்முக் நிர்பந்தித்ததாக தெரிவித்திருந்தார்.
இந்தப் புகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவரின் வீட்டுக்கு வெளியே பெண் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வீராங்கனைகள் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் இன்று அனில் தேஷ்முக் தனி உதவியாளர் குந்தன் ஷிண்டே கைதுசெய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸூடன் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்துள்ளது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : போலி தடுப்பூசி போட்டு மயங்கி விழுந்த நடிகை!